
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் எந்த இரு அணிகள் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இந்த நான்கு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த மேத்யூ ஷார்ட் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.