
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடல் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடியாக தொடங்கினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 15 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்துடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்துள்ளனர்.