
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கூப்பர் கன்னொலிக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் அணியில் மாற்று தொடக்க வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் உள்ளார். இருப்பினும் அவரது சமீபத்தில் ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதனால் அவருக்கு லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. ஒருவேளை அவர் தேர்வு செய்யப்படாத பட்சத்தில் ஜோஷ் இங்கில்ஸ் அல்லது அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு தொடக்க வீரர் இடம் கிடைக்கும்.