
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - குசால் பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெண்டிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் தனஞ்செய டி சில்வா, தசுன் ஷனகா ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் பெரேரா 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.