
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கமிந்து மெண்டிஸும், 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகேவும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் சரித் அசலங்கா அரைசதம் கடந்த நிலையில், துனித் வெல்லாலகே 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா 7 ரன்களிலும், மஹீஷ் தீக்ஷனா 2 ரன்னிலும் நடையைக் கட்ட இலங்கை அணி 150 ரன்களை எட்டுவதற்கு தடுமாறியது. அதன்பின் ஈஷான் மலிங்கா ஒருபக்கம் பந்தை தடுத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.