
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வோல்வார்ட், சோலே ட்ரையன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சோலே ட்ரையான் 45 ரன்களையும், வோல்வார்ட் 35 ரன்களையும் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சார்லீ டீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் 34 ரன்களையும், மையா பௌச்சர் 33 ரன்களையும் சேர்த்து அணிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதேசமயம் நாட் ஸ்கைவர் 20 ரன்களையும், டேனியல் வையட் 25 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.