
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதன்படி மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த முறை வழக்கம் போல் ஒவ்வொரு அணிகள் தங்களது சொந்த மைதானத்திலும் வெளி மைதானத்திலும் சரிசமமான போட்டிகளை விளையாட உள்ளன.
இரு குழுக்களாக பத்து அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதில் மும்பை, டெல்லி, ராஜஸ்தான், லக்னோ, கொல்கத்தா அணிகள் ஒரு பிரிவிலும், சென்னை,பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு, குஜராத் ஆகிய ஐந்து அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒரு பிரிவில் உள்ள அணி மற்றொரு பிரிவில் உள்ள ஐந்து அணிகளையும் தலா இரண்டு முறை எதிர்கொள்ளும். தனது பிரிவில் உள்ள நான்கு அணிகளுடன் ஒரு முறை மோதும். இதன் மூலம் 14 ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கும்.
அதன்படி மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிகொள்கிறது. இப்போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல் இத்தொடரின் இறுதிப்போட்டி மே 28ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.