
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் தற்போது அரையிறுதியை நோக்கி பயணித்து வரும் இந்திய அணியானது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் டி20 அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதோடு இந்த உலகக் கோப்பை தொடரிலும் தினேஷ் கார்த்திக் இதுவரை பெரிய அளவில் இந்திய அணிக்கு பங்களிப்பை வழங்கவில்லை என்பதனால் அவர் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட இருக்கிறார் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.