
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடருக்கு முன்னோடியாக இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என்ற தொடர் வெகு காலத்திற்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தும் விதமாக தி ஹண்ட்ரெட் எனப்படும் கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் சீசன் நடைபெற்றது. இந்த சீசனின் இந்தத் தொடரின் முதல் சாம்பியனாக சதர்ன் பிரேவ் அணி வந்தது. தற்போது இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் சதர்ன் பிரேவ் அணியும் வெல்ஸ் ஃபயர் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெல்ஸ் ஃபயர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய வந்த சதர்ன் பிரேவ் அணியை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் அதிர வைத்தார். அந்த அணி 54 ஆவது பந்தில் தனது 6ஆவது விக்கட்டை 56 ரன்களுக்கு பறி கொடுத்தது. இந்த நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் ஒரு வித்தியாசமான இன்னிங்ஸை விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் சூறாவளி போல் சுழன்ற அவர் மொத்த ஆட்டத்தின் முடிவையும் தனியாளாக மாற்றி விட்டார்.