
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டிம் ஆம்ப்ரோஸ் 53 ரன்களையும், கேப்டன் ஈயான் மோர்கன் 36 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்கோஃபீல்ட் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களையும், ட்ரெம்லெட் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜாக் காலிஸை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹாஷிம் அம்லா - அல்விரோ பீட்டர்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். இதில் அல்விரோ பீட்டர்சன் 56 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாஷிம் ஆம்லா 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 82 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.