SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைப் படைக்குமா இந்தியா அணி?
தென் ஆப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
Trending
முதல் டெஸ்டில் கேஎல் ராகுல் , மயங்க் அகர்வால் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். அதேபோல் பந்து வீச்சில் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர்.
அதன் காரணமாக இந்திய அணியில் அதிகமாற்றம் இருக்க வாய்ப்பில்லை. எனினும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கே முற்றிலுமாக சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வினுக்கு பதில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் உமேஷ் யாதவ் இடம் பெறக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சு பலமாக இருந்தாலும் பேட்டிங்கில் தேக்க நிலை காணப்படுகிறது. முதல் டெஸ்டில் கேப்டன் டீன் எல்கர், டெம்பா பவுமா மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல்பட்டனர்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் திடீரென ஓய்வு பெற்றுள்ளது நடுவரிசை பேட்டிங்கை பாதிக்கக்கூடும். அவரது இடத்தில் அறிமுக வீரரான ரியான் ரிக்கிள்டன் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. இதேபோன்று காயம் அடைந்துள்ள வியான் முல்டருக்கு மாற்றாக டுவான் ஆலிவர் களமிறங்கக் கூடும்.
ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. அதேபோன்ற செயல்திறனை வெளிப்படுத்துவதில் இந்திய அணி முனைப்பு காட்டக்கூடும்.
இந்த டெஸ்டில் இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும். இதனால் இப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பண்மடங்கு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி
தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மக்ரம், கீகன் பீட்டர்சன், ராஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரைன்/ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
இந்தியா - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Win Big, Make Your Cricket Tales Now