
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான டெவான் கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். மேலும் நியூசிலாந்து அணி இலக்கை துரத்திய போதும் அவர் விளையாட வரவில்லை. இந்நிலையில் டெவான் கான்வேவின் காயம் குறித்த அப்டெட் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.