
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கி ஜமைக்கா தலாவாஸ் அணி பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், அல்கெஸ் ஹேல்ஸ் 12 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸி 7 ரன்களுக்கும், ரெய்ஃபெர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஷமாரா ப்ரூக்ஸ் - இமாத் வசிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமாரா ப்ரூக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்களில் ப்ரூக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாத் வாசிமும் 33 ரன்களுக்கு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் ஜமைக்கா தலாவாஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது.