
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஜமைக்கா தலாவாஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தலாவாஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் - மார்க் தயால் இணை களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 30 ரன்களைச் சேர்த்திருந்த மார்க் தயால் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த மார்ட்டின் கப்திலும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் - கேப்டன் கிரேன் பொல்லார்ட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இந்த இணையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதில் 30 ரன்களை எடுத்திருந்த லோர்கன் டக்கர் தனது விக்கெட்டை இழந்தார்.