
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மேலும் 9 போட்டிகளின் முடிவில் இவ்விரு அணிகளுமே தலா 7 புள்ளிகளை பெற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதை தொடர்ந்து களமிறங்கிய கயானா அணிக்கு ஆயுப் 16, ஓடின் ஸ்மித் 21 என தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஆண்டர்சன் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.
அதில் ஆண்டர்சன் சற்று மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்த மறுபுறம் வெளுத்து வாங்கிய சாய் ஹோப் பார்போடாஸ் பவுலர்களை பந்தாடி வேகமாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார். அப்போது 16ஆவது ஓவரை வீசிய ரஹீம் கார்ன்வாலை தெறிக்க விட்ட ஹோப், 4, 6, 6, 6, 4, 6 என ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசி சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை 41 பந்துகளில் அடித்தார். இதன் வாயிலாக சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2ஆவது வீரர் என்ற சாதனை படைத்தார்.