
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ் 5 ரன்களுக்கும், கேப்டன் ஆண்ட்ரே ஃபிளட்சர் 9 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 22 ரன்களிலும், வநிந்து ஹசரங்கா 23 ரன்களுக்கும், ரைலீ ரூஸோவ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய மைக்கைல் லூயிஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கைல் லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 63 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 153 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜஸ்டின் கிரீவ்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களை எடுத்திருந்த ஜஸ்டின் கிரீவ்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.