
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் சிபிஎல் டி20 லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து பார்படாஸ் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கைல் மேயர்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்
இதனால் அந்த அணி ரன்கள் ஏதுமில்லாத சமயத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மைக்கைல் லூயிஸ் - வநிந்து ஹசரங்கா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மைக்கைல் லூயிஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வநிந்து ஹசரங்காவும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்களையும், ரியான் ஜான் 29 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 29 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.