
12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணி தரப்பில் குயின்டன் டி காக் - கலீம் அலீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய கலீம் அலீன் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலிக் அதானாஸ் 16 ரன்களுக்கும், கேப்டன் ரோவ்மன் பாவெல் 7 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த குயின்டன் டி காக் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி காக் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 115 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. கயானா அணி தரப்பில் ரெய்மன் ரெய்ஃபெர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசாம் கான், டிம் ராபின்சன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.