
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில், மறுமுனையில் கேப்டன் டூ பிளெசிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சார்லஸுடன் இணைந்த அகீம் அகஸ்டேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகீம் அகஸ்டேவும் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடியதுடன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 45 ரன்களைக் குவிக்க, லூசியா கிங்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் தரப்பில் தீக்ஷனா, மஹாராஜ், நயீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.