
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கடந்த 2005இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒருசில வருடங்களிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பு வீரராக விளையாடினார். அதிரடியாக பேட்டிங் திறமை பெற்ற அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
கடந்த 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரராக விளையாடிய அவர் டாப் ஆர்டர் சரிந்த எத்தனையோ போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போட்டால் அதை பிரிக்கும் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்த பெருமைக்குரியவர்.
குறிப்பாக கடந்த 2011 உலக கோப்பையில் காலிறுதி மற்றும் அரையிறுதி போன்ற அழுத்தமான நாக்-அவுட் போட்டிகளில் அவர் அடித்த கணிசமான ரன்கள் தான் இந்தியா 28 வருடங்கள் கழித்து உலககோப்பையை வெல்ல முக்கிய காரணம் என்று அப்போதிருந்த பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன் பாராட்டியிருந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தமிழகத்தின் தலை நகரை மையமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அசால்டாக பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு ஏராளமான ரன்களை குவித்தார்.