
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 73 ஓவர்களில் விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்துள்ளது.
இந்திய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே 338 ரன்களை குவித்துள்ளதால் இன்று மேலும் ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணியை அழுத்தத்திற்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சின் போது இந்திய அணி முதல் நாளில் அதிரடியாக ரன்களை குவித்தாலும் துவக்கம் சரியாக இல்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 17 ரன்களும், புஜாரா 13 ரன்களும், விகாரி 20 ரன்களும், விராட் கோலி 11 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்களில் வெளியேறியதால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.