ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல்!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர் .

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கோயர்ட்சென். 1992-ம் ஆண்டு, முதல் முறையாக நடுவராக பணியாற்றிய அவர் மொத்தம் 331 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி கோயர்ட்சென், நண்பர்களுடன் கோல்ப் விளையாட சென்று விட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். கோயர்ட்சென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “ரூடி கோயர்ட்செனுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. களத்தில் நான் அவசரகதியில் ஷாட்டுகள் அடிக்கும் போதெல்லாம் சத்தம் போடுவார். புத்திசாலித்தனமாக விளையாடு. உனது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறேன் என்று சொல்வார்.
Trending
ஒரு முறை தனது மகனுக்கு தரமான ஒரு காலுறை (பேடு) வாங்க வேண்டும் என்று கூறி அது பற்றி விசாரித்தார். அவருக்கு அதை பரிசாக அளித்தேன். பழகுவதற்கு இனிமையான அற்புதமான மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று கூறியுள்ளார்.
இதே போல் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், “நான் 1992 இல் ரூடியை முதன்முதலில் சந்தித்தேன், பல ஆண்டுகளாக நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவர் எப்போதும் ஒரு பெரிய புன்னகையுடன் வீரர்களை வரவேற்கும் அன்பான மனிதர். அவர் ஒருவரிடமிருந்தும் அனைவருக்கும் மரியாதை செலுத்தினார். அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மிகவும் தவறவிடப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது பதிவில், “ரூடி கோயர்ட்செனின் மறைவு ஒரு சோகமான செய்தி. அவர் ஒரு திறமையான தனிநபர் மற்றும் விளையாட்டு கண்ட சிறந்த நடுவர்களில் ஒருவர், அவரது கூர்மையான முடிவெடுக்கும் திறன்களுக்கு பெயர் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் குமார் சங்கக்கரா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now