
ஐபிஎல் 16ஆவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலுமே குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. பத்து அணிகள் பங்கு பெற்ற கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடராக இருக்க போகிறது. ஐபிஎல் தொடரில் எப்போதும் நாங்கள் ஒரு மைதானத்தில் இருந்து இன்னொரு மைதானத்திற்கு பயணம் செய்து கொண்டே இருப்போம். இப்போது பயோ பபுலும் இல்லை. இதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் நான்கு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். ஒரு மோசமான சீசனில் இருந்து தற்போது விளையாட வந்திருக்கிறோம். இதுவே நாங்கள் சிறப்பாக விளையாட எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இம்முறை நாங்கள் சரியான முறையில் திட்டமிட்டு இருக்கிறோம். கடந்த முறை செய்த தவறை இம்முறை நாங்கள் நிச்சயமாக சரி செய்வோம்.இந்த சீசன் எங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல சீசனாக அமையும்” என தெரிவித்துள்ளார்.