
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தன்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்களைச் சேர்த்த நிலையில், தன்ஸித் ஹசன் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஒருபக்கம் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபக்கம் களமிறங்கிய அணியின் அனுபவ வீரர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 13 ரன்களிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 2 ரன்னிலும், மஹ்முதுல்லா 4 ரன்னிலும் என அடுத்தடுத்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.