
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பாபர் ஆசாம் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆஅட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய முகமது ரிஸ்வான் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.