சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியும் ஏறத்தாழ அரையிறுதிச்சுற்றை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் இருந்தன. மேலும் இது ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
Trending
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சால்ட் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட்டும் 24 ரன்களை எடுத்த நிலையில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 37 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஹாரி புரூக் 19 ரன்களிலும், அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 37 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சொபிக்க தவறினர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பங்கிற்கு 25 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் கேப்டன் ஜோஸ் பட்லரும் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களிலும் என அடுத்தடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினர். இதனால் அந்த அணி 47 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இருவரும் இணைந்து 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹென்ரிச் கிளாசென் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேன்டர் டுசென் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 29.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now