டேனியல் வெட்டோரியின் ஆலோசனை எங்களுக்கு பெரிதும் உதவியது - பாட் கம்மின்ஸ்!
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரஜாஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ரன்களை அடித்தார். பந்துவீச்சில் டிரென்ட் போல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சிறப்பாக தொடங்கினாலு, ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவின் எதிர்பாராத திருப்பத்தின் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் துருவ் ஜுரெல் இறுதிவரை போராடிய நிலையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழ்னது 139 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
Trending
ஹைதராபாத் அணி தரப்பில் ஷபாஸ் அஹ்மத், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷாபாஸ் அஹ்மத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்த சீசன் முழுவதும் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி வீரர்களுக்குள் சிறந்த வைப் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதை செய்துவிட்டோம்.
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் எனது வேலையை எளிதாக்குகின்றனர். இப்போட்டியில் ஷாபாஸ் அஹ்மதை இம்பேக்ட் வீரராக களமிறக்க வேண்டும் என பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆலோசனை வழங்கினார். இறுதியில் அவரது ஆலோசனை எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
மிடில் ஓவரில் அபிஷேக் சர்மா சிறப்பாக பந்து வீசினார். வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவரை பயன்படுத்தினோம். அவர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். அவர்கள் இருவரும் எங்களுக்கு தேவையான சமயத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதுபோன்ற மைதானங்களில் 170 ரன்கள் என்பது மிகவும் கடினமான இலக்கு. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், வாய்ப்பு எங்களுக்குதான் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now