
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இலங்கை அணியில் காயத்தால் விலகிய கேப்டன் ஷனகா, பதிரானா ஆகியோருக்கு பதிலாக சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா சேர்க்கப்பட்டனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 61, குஷால் பெரேரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
ஆனால் அவர்களைத் தவிர்த்து குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதை தொடர்ந்து 210 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11 ரன்கள் மற்றும் சுமித் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.