
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 9ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பிராண்டன் கிங் 10, ஷமார் ப்ரூக்ஸ் 2, கேப்டன் ஷாய் ஹோப் 2, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜான்சன் சார்லஸும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேசி கார்டி ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், ரோமாரியோ செஃபெர்ட் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டியும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.