CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி உலகக்கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது நெதர்லாந்து!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 6 சுற்றின் 5ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து நெதர்லாந்து அணி விளையாட தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 35 ரன்களை எடுத்திருந்த மேக்ஸ் ஓடவுட் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த விக்ரம்ஜித் சிங் - வெஸ்லி பரேஸி இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய விக்ரம்ஜித் சிங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 110 ரன்களை எடுத்திருந்த விக்ரம்ஜித் சிங் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 4 ரன்களுக்கும், பாஸ் டீ லீஸ் 39 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்லி பரேஸியும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பினை 3 ரன்களில் நழுவவிட்டார். இறுதில் சகிப் சுல்பிகர் 33 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர்கள் ஜதிந்தர் சிங் 17 ரன்களுக்கும், கஷ்யப் பிரஜபதி 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அகிப் இலியாஸ் 4 ரன்களுக்கும், முகமது நதீம் 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அயான் கான் - ஷொயிப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயான் கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷோயிப் கான் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின் 44 ஓவர்களில் ஓமன் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களைச் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி அத்துடன் முடிவுக்கு வந்தாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நெதர்லாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now