
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கும் ஜெரால்ட் கும்பி - இன்னசெண்ட் கையா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கையா 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கும்பியுடன் இணைந்த கேப்டன் சீன் வில்லியம்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 78 ரன்களில் கும்பி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தினார். இதற்கிடையில் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ரஸா 48 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.