
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மார்ஷ் 31 ரன்களிலும், டேவிட் வார்னர் 48 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 27 ரன்களுக்கும், லபுஷாக்னே 40 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - கேமரூன் க்ரீன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 77 ரன்களையும், கேமரூன் க்ரீன் 50 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 48 ரன்களையும் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை எடுத்தது.