CWC 2023: பயிற்சி போட்டிகளிலேயே விளையாடும் மழை; ரசிகர்கள் காட்டம்!
உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்காக பயிற்சி போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற மூன்று பயிற்சி போட்டிகளில் திருவனந்தபுரத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருந்த பயிற்சி போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைப்பட்டது.
இந்த நிலையில் இன்று கவுகாத்தி மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியும், மேலும் திருவனந்தபுரத்தில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியும் நடக்க இருந்தது. இந்திய அணி மோத இருந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டு இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதுவரை வெயில் அடித்த மைதானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. இடைவிடாமல் பெய்த இந்த மழையின் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
Trending
தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் திருவனந்தபுரத்தில் மோதிக் கொள்ளும் போட்டியில் மழை நின்று, போட்டி தொடங்கவுள்ளது. பொதுவாக அக்டோபர் - நவம்பர் மாதங்கள் இந்தியாவில் மழைக்காலம். குறிப்பாக தென் இந்தியாவில் இது வழக்கமாக மழை பெய்கின்ற காலம். இப்படியான நேரத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டும் சேர்ந்து இந்தியாவில் உலகக்கோப்பை நடத்துவது தவறான முடிவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பயிற்சி போட்டி ஆரம்பித்ததில் இருந்தே அச்சப்பட்ட படியே மழைபெரிய தடையை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக வருகின்ற உலகக் கோப்பை போட்டிகள் நல்ல முறையில் நடைபெறுமா? என்கின்ற சந்தேகம் ரசிகர்களிடையே மிக அதிகமாக இருக்கிறது. மேலும் பொதுவாக உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் ஐபிஎல் நடக்கும் நேரத்தில் நடத்தப்படும். இந்த நேரத்தில் மழை வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
ஆனால் ஐபிஎல் தொடரால் கிடைக்கும் வருமானத்தின் காரணமாக பிசிசிஐ உலகக் கோப்பை தொடரை அக்டோபர் - நவம்பருக்கு மாற்றியது. இதற்கு ஐசிசியும் ஒத்துக்கொண்டதுதான் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தற்பொழுது சமூக வலைதளத்தில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரண்டுக்கும் எதிராக ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now