
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸிஅ இழந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 282 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் மட்டுமே அரை சதம் கடந்து ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மற்ற எல்லோரும் அவர்களுடைய வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாட போய் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.
இதன் காரணமாக இறுதியில் அடித்து விளையாடுவதற்கு சரியான சூழல் அமையாமல் இங்கிலாந்து சிக்கிக் கொண்டது. ஆடுகளம் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது அதைவிட ஆடுகளம் வசதியாக இருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்து விட்டார்கள். இருவரும் சதத்தை எட்டி 36.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு வெற்றியையும் கொண்டு வந்தார்கள்.