
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லெவிட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவுட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ரன்களுக்கும், முஸா அஹ்மத் 5 ரன்களுக்கும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 2 ரன்களுக்கும், நோஹா கிராஸ் 27 ரன்களுக்கும், கைல் கெலின், ஆர்யன் தத், கிளேட்டன் ஃபிலாய்ட் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடவுட் 77 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் நோஸ்துஷ் கென்ஜிகே, ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.