
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது மழை வெள்ளத்தால் அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக மிக்ஜாம் எனும் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை நகரில் விடாது கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகள் தண்ணீரால் நிரம்பியதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி அன்றாட வாழ்க்கைக்கு செல்வதில் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்தனர்.
சொல்லப்போனால் மழை காரணமாக மின்சார தடை ஏற்பட்டதால் மக்களும் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களும் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளானார்கள். அது போக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லலாம் என்று பார்த்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்கள் சாப்பிடுவதற்கு கூட கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அதிகப்படியான வெள்ளத்தால் கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட காணொளிக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இவற்றைப் பார்த்த நட்சத்திர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வேறு டேவிட் வார்னர் இந்த சமயத்தில் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.