
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 26) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு பார்த் ரேகாடே - துருவ் ஷோரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பார்த் ரேகாடே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தர்ஷன் நல்கண்டோவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து துருவ் ஷோரேவும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் விதர்பா அணி 24 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் அபாரமாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த கருண் நாயரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.