
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாக்கூர் நீக்கப்பட்டு ஷமி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு டேவோன் கான்வே 0, வில் எங் 17 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்தரா மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்தார்கள்.
அதில் ஜடேஜா தவற விட்ட கேட்சை பயன்படுத்திய ரச்சின் ரவீந்திரா இந்தியாவுக்கு சவாலாக மாறி அரை சதம் கடந்து 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு வழியாக 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் டாம் லாதம் 5 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மிட்சேல் சதமடித்து நியூசிலாந்துக்காக தொடர்ந்து போராடினார்.