
Dasun Shanaka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை தசுன் ஷனகா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா 46 ரன்களையும், தசுன் ஷனகா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதல் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் ரன்கள் ஏதுமின்றியும், லிட்டன் தாஸ் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் 73 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 27 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.