
Dasun Shanaka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தசுன் ஷனகா பெற்றுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 18 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனேவின் சாதனையை முறியடிப்பார்.