
ஒரு காலத்தில் ஆசியாவில் இந்திய அணியைத் தாண்டி ஆதிக்கம் செலுத்திய அணியாக இலங்கை இருந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியா ஆசிய கோப்பை தொடரை எட்டு முறை வென்று இருக்க, இலங்கை ஆறு முறை வென்று இருப்பதே அதற்கு சாட்சி. மேலும் உலக கிரிக்கெட்டுக்குள் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதற்கு பிறகு, வெகு வேகமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அர்ஜுன ரணதுங்கா தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை கைப்பற்றி அசத்தியது.
அங்கிருந்து இலங்கை உலக கிரிக்கெட்டில் ஒரு புது பிராண்டை அறிமுகப்படுத்தி விளையாடியது. ஒருநாள் கிரிக்கெட்டில் பவர் பிளேவை எப்படி பயன்படுத்துவது என்று சரத் ஜெயசூர்யாவை வைத்து இலங்கை காட்டியது. இன்னொரு பக்கத்தில் உலகச் சாதனை வீரரான முத்தையா முரளிதரன் பந்துவீச்சுத் துறையில் இருந்தார். கூடவே சமிந்தா வாஸ் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை அணி யாருக்கும் பெரிய அச்சுறுத்தலான அணி.
இதற்கு அடுத்து ஜெயவர்த்தனே காலத்தில் குமார் சங்கக்கரா எனும் லெஜன்ட் பேட்ஸ்மேன் கிடைத்தால், இந்த அணியுடன் இறுதியாக லஷீத் மலிங்கா வந்து சேர்ந்தார். அங்கிருந்து இலங்கை தனது இரண்டாவது வலிமையான அணியோடு பயணிக்க ஆரம்பித்தது. இப்படி இருந்த இலங்கை கிரிக்கெட்டில் திடீரென நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஓய்வு பெற்று நகர, இலங்கை கிரிக்கெட் வெகு வேகமாக வீழ்ச்சி அடைந்தது. அவர்களால் உள்நாட்டில் கூட தொடர்களை தக்க வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.