மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
நான் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. அதே வேளையில் அணிக்கு திரும்பியதோடு எனது பங்களிப்பை வழங்கி அதில் நாங்கள் வெற்றியும் பெற்றதில் எனக்கு கூடுதல் சந்தோஷம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தினாலும், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் ஆகியோரது அதிரடியான பினீஷிங்காலும் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம் ஆகியோர் அரைசதங்களை கடந்த போதிலும் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து 5 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு உதவிய அந்த அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 109 ரன்கள் குவித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், “நான் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. அதே வேளையில் அணிக்கு திரும்பியதோடு எனது பங்களிப்பை வழங்கி அதில் நாங்கள் வெற்றியும் பெற்றதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். இந்த போட்டி கடைசி வரை மிகவும் நெருக்கமாக சென்றது இறுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு இந்த போட்டியில் நான் விளையாட ஆரம்பித்ததும் இரண்டு ஷாட்டுகள் கிளிக் ஆனதும் என்னுடைய பேட்டிங் ரிதம் கிடைத்தது.
கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக நான் அணியில் விளையாடாமல் இருந்தேன். ஆனாலும் தற்போது மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருக்கிறேன். வார்னருடன் விளையாடும்போது மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் நாங்கள் இருவருமே சமீப காலமாக நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். நாங்கள் ஒன்றாக விளையாடும் போது எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now