
பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவான இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது ஷாஹின் ஆஃப்ரிடி பந்துவீச்சில் எளிதான ஒரு கேட்சை கொடுத்தார். ஆனால் அதை ஸ்லிப்பில் நின்ற பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தவற விட்டார். இது பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.
இதனை அடுத்து டேவிட் வார்னர் 83 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டேவிட் வார்னர் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு ஸ்டீவ் வாக் அந்த இடத்தில் இருந்த நிலையில் தற்போது டேவிட் வார்னர் முறியடித்து இருக்கிறார்.