
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இந்த அணியில் டி காக் 19 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆயூஷ் பதோனி அர்ஷத் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும், அர்ஷத் கான் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர்.