
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா கத்துக்குட்டி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடும் 399/8 ரன்கள் குவித்து மிரட்டியது.
அந்த அணிக்கு மிட்சேல் மார்ஷ் ஆரம்பத்திலேயே 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ஆவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நிலையில் வார்னர் 50 ரன்கள் கடந்து அசத்திய நிலையில் எதிர்புறம் வந்த மார்னஸ் லபுஷாக்னே தன்னுடைய தரத்தைக் காட்டி அரைசதம் கடந்து 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நெதர்லாந்து பவுலர்களை பந்தாடிய வார்னர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 104 ரன்கள் விளாசி அவுட்டானார்.