
சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியா வீரரான இவருக்கு, ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். கடந்த 2018ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக 12 மாதம் கிரிக்கெட் விளையாட தடையும் பெற்றார்.
தற்போது, 37 வயதான டேவிட் வார்னர், 111 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 26 சதங்களுடன் 8,695 ரன்களும், 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்களும், 99 டி20 போட்டிகள் விளையாடி ஒரு சதத்துடன் 2,894 ரன்கள் குவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டி தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் டேவிட் வார்னர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.