
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி, 2ஆவது இடத்தில் இருக்கும் அணியை எதிர்த்து ஆடவிருப்பதால் முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கு இன்று மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அதாவது ஹைதராபாத் அணியை சேர்ந்த தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் சேர்ந்து விஜய் சங்கரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே இன்றைய போட்டி நடைபெறுமா என்பதில் சிக்கல் நீடித்தது. ஆனால் திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் ஒரு புறம் கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படவுள்ளன. டெல்லி அணிக்காக விளையாடி வரும் அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற இன்னும் 5 விக்கெட்களே வேண்டும். தற்போது வரை இலங்கை வீரர் லசித் மலிங்கா எடுத்த 170 விக்கெட்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. அமித் மிஸ்ரா தற்போது 166 விக்கெட்களுடன் உள்ளார். எனவே இன்னும் 5 விக்கெட்களை எடுத்தால் சாதனை படைப்பார்.