
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக சென்சூரியன் நகரில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் தனி ஒருவனாக சதமடித்து 101 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய இந்திய அணியை திறம்பட எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தம்முடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 185 ரன்களையும், மார்கோ ஜான்சென் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் கோட்டை விட்டது.