
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. மேலும் விராட் கோலிக்கு பின் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய கேப்டன் எனும் பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றார்.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் வரும் வரும் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.