
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டியை அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் இடம்பிடித்துள்ளன. அதேபோல் குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்காட்லாந்து அணியும் இடம்பிடித்துள்ளன.
இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.